ஜெர்மனியின் மிகப்பரபரப்பான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள அரிய வகை மலேரியா நோய்த்தொற்று உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த விமானம் மூலம் நுழைந்த கொசுக்களால் பரவியதாகக் கருதப்படும் இந்த நோய்த்தொற்றால், விமான நிலைய ஊழியர்கள் 6 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் மலேரியா பாதிப்பு ஏற்படுவது மிக அரிதாகும். இருப்பினும், வெப்பமண்டல நாடுகளிலிருந்து வரும் நீண்டதூர சர்வதேச விமானங்களில் புகுந்து பயணிக்கும் கொசுக்கள் மூலமாகவே இந்த நோய் பரவியிருக்கக்கூடும் என ஜெர்மனி சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மருத்துவ உலகில் இந்தச் சம்பவம் ‘விமான நிலைய மலேரியா’ (Airport Malaria) என்று குறிப்பிடப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தொடக்கத்தில் நோயின் வீரியம் தெரியாததால் சிகிச்சை பெற தாமதமானதே உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் கொசுக்களை ஒழிக்கும் பணிகளும், கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.