நேபாள நாட்டின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கரையை கடந்து சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நூற்றுக்கணக்கான மக்களைத் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுவதால், பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காகத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமிழக அரசு தொடர் தொடர்பில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களைச் சேகரிக்கவும், அவர்களை விரைவாகத் தாயகம் அழைத்து வரவும் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.