நேபாளத்தில் அண்மையில் பெய்த கொடூரமான கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையான சேதம் விளைவித்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பாறை போல் உறுதியாக நின்ற ஒரு பச்சை நிற வீட்டின் பால்கனியில் சிக்கியிருந்த மக்கள், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுற்றிலும் இருந்த பலமாடி கட்டிடங்கள் வெள்ளத்தின் சீற்றத்தில் சரிந்து விழுந்த போதிலும், அந்த பச்சை நிற வீடு மட்டும் அசையாமல் கம்பீரமாக நின்றது. அதன் பால்கனியில் சிலர் உயிருக்குப் பயந்து நின்றுகொண்டிருக்க, சீறிப்பாய்ந்த வெள்ளத்தின் வேகம் பார்ப்போரை நெஞ்சடைக்க வைத்தது. இந்த திகிலூட்டும் காட்சிகளின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளத்தின் சீற்றம் சற்றே தணிந்ததைத் தொடர்ந்து, பால்கனியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பேரழிவிற்கு இடையிலும் அசாத்திய அதிர்ஷ்டத்தால் உயிருடன் மீண்ட இந்த சம்பவம், இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.