நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நாடு முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக உயர்ந்துள்ளதாக நேபாளக் காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
திடீரென வீடுகளைச் சூழ்ந்த வெள்ள நீரால் வெளியேற முடியாமல், பல குடும்பங்கள் தங்களது வீட்டின் பால்கனிகளில் தஞ்சமடைந்து செய்வதறியாது தவித்து வருகின்றன. பால்கனியில் நின்றபடி உதவிக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின் நெஞ்சை உருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாக பால்கனிகளில் முடங்கியுள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் கடும் சவால் நிலவுகிறது.