குஜராத் மாநிலத்தில் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்குப் பயன்படும் போலியான மருந்துகளைத் தயாரித்து, மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்து வந்த கும்பலை அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினரும், உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகமும் (FDCA) இணைந்து கைது செய்துள்ளனர். இந்த அதிரடி சோதனையில் போலி மருந்து நெட்வொர்க்கில் தொடர்புடைய 3 நபர்கள் பிடிபட்டுள்ளனர்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தினமும் உட்கொள்ளப்படும் மாத்திரைகள் போலியாக இருக்கும் பட்சத்தில், அது நோயாளிகளுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற கடுமையான பக்க விளைவுகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
போலி மருந்துகளைக் கண்டறிய சில எளிய வழிகள்:
1. மருந்தின் அட்டைப் பெட்டியில் உள்ள லோகோ, வண்ணங்கள் மற்றும் எழுத்துப்பிழைகளை கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.
2. பேக்கிங்கில் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து உற்பத்தியாளரின் விவரங்களை உறுதி செய்யலாம்.
3. மாத்திரைகளின் வடிவம், நிறம் அல்லது சுவையில் வழக்கத்திற்கு மாறான மாற்றம் இருந்தால் உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
4. எப்போதுமே உரிமம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.