சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக மிகப்பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அங்கு செயல்பட்டு வரும் 9 நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர். குறிப்பாக, 10 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதைக்குள் 40 இந்தியர்கள் உட்பட 400 பேர் சிக்குண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனமழை மற்றும் வெள்ளத்தின் தீவிரத்தால் அப்பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களின் தற்போதைய நிலை குறித்து துல்லியமான தகவல்கள் அறிய முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். நேபாள ராணுவத்தினரும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேபாள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.