பிரபல தொழிலதிபர் சுபாஷ் சந்திரா தொடர்பான கடன் நிலுவை வழக்கில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) பிறப்பித்துள்ள அதிர்ச்சி உத்தரவு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவர் வங்கிகளில் பெற்ற ரூ.22,000 கோடிக்கும் அதிகமான கடனில், சுமார் 99.97 சதவீத தொகையைத் தள்ளுபடி செய்து, வெறும் ரூ.6.5 கோடியை மட்டும் திருப்பிச் செலுத்த தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் கடனை வழங்கிய பொதுத்துறை வங்கிகளுக்குப் மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வெறும் 0.03 சதவீதத் தொகையை மட்டும் மீட்கும் வகையில் அமைந்துள்ள இந்த கடன் தீர்வுத் திட்டம் நியாயமற்றது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிறுவனங்களின் கடன் மீட்பு மற்றும் திவால் சட்ட நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்தும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தைப் பாதுகாப்பதில் உள்ள பலவீனங்கள் குறித்தும் இந்த சம்பவம் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த முடிவை எதிர்த்து வங்கிகள் மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.