பிரபல தொழிலதிபரும் ஜீ குழுமத்தின் முன்னாள் தலைவருமான சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் வழக்கில் அதிர்ச்சி அளிக்கும் புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இவர் பல்வேறு கடன் வழாங்கிய நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய மொத்தக் கோரிக்கைத் தொகை ரூ.22,006.57 கோடி என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தில், கடன் அளித்தவர்களுக்கு வெறும் ரூ.6.25 கோடியும், இந்த திவால் நடவடிக்கைக்கான செலவுகளுக்காக ரூ.25 லட்சமும் மட்டுமே வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்த வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மிகச்சிறிய தொகையை மட்டுமே திருப்பிச் செலுத்தும் இந்தத் திட்டத்தை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வெறும் 6.5 கோடி ரூபாய் என்பது கடன் அளித்தவர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்த வழக்கினை விசாரித்த NCLT, தீர்வுத் திட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மை மற்றும் கடன் வழங்குநர்களின் ஒப்புதல் குறித்து புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்தியக் கார்ப்பரேட் உலகில் தனிநபர் பிணை உத்தரவாத திவால் சட்டத்தின் கீழ் நடைபெறும் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாக இது கவனத்தைப் பெற்றுள்ளது.