பிரபல தொழிலதிபரான சுபாஷ் சந்திரா மீதான தனிப்பட்ட திவால் நடவடிக்கையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சுபாஷ் சந்திரா செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகையான ரூ.22,006.57 கோடியில், வெறும் ரூ.6.5 கோடியை மட்டும் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொள்ளும் வகையில் புதிய தீர்வுத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு ரூ.6.25 கோடியும், திவால் நடவடிக்கைகளுக்கான நிர்வாகச் செலவாக ரூ.25 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையில், வெறும் 0.03 சதவீதம் மட்டுமே திருப்பிச் செலுத்த முன்மொழியப்பட்டிருப்பது, கடன் அளித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கடன் வழங்கிய அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைக் கேட்டறிந்த என்.சி.எல்.டி, வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பினரும் தங்களது இறுதி விளக்கங்களை விரைந்து அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்திய கார்ப்பரேட் கடன் சந்தையில் இந்த வழக்கு தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.