பிரபல தொழிலதிபரும் ஜீ குழுமத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் விவகாரத்தில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLT) புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இவருடைய தனிப்பட்ட திவால் வழக்கில் கடன் வழங்கியவர்களால் கோரப்பட்ட மொத்தத் தொகை ரூ.22,006.57 கோடியாகும். ஆனால், இந்த மிகப்பெரிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய தீர்வுத் திட்டத்தில், கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வெறும் ரூ.6.25 கோடி மட்டுமே வழங்கப்படும் என்றும், திவால் நடவடிக்கைகளுக்கான செலவாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த கடனில் வெறும் 0.03 சதவீதத் தொகை மட்டுமே திருப்பிச் செலுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான கடன் நிலுவைக்கு மிகக் குறைந்த தொகையைத் தீர்வாக ஆஃபர் செய்திருப்பது நிதித்துறையிலும் கடன் வழங்கிய நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்வுத் திட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மை மற்றும் அதன் நியாயங்கள் குறித்து என்சிஎல்டி விரிவாக ஆய்வு செய்து வருகிறது.