நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திரிசூலி ஆற்று நீர் திடீரென சீறிப் பாய்ந்து சுரங்கப்பாதைக்குள் புகுந்தபோது, அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நேபாள தொழிலாளி ஒருவர் தனது பயங்கர அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், “நாங்கள் சுரங்கப்பாதையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திரிசூலி ஆற்றின் நீர் சீறிக்கொண்டு உள்ளே பாய்ந்தது. என்ன செய்வது என்று அறியாமல் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினேன். சுமார் 20 நிமிடங்கள் அந்த ஆற்று நீர் என்னை மரணத்தின் விளிம்பு வரை துரத்தியது. எப்படியோ போராடி மேடான பகுதிக்குச் சென்று உயிர் தப்பினேன்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார். இந்த கோர இயற்கை சீற்றம் நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது.