தமிழகத்தில் போக்குவரத்து சேவைகளை மேலும் எளிமையாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தமிழக அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் (DL), வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் காகிதம் அல்லது பிளாஸ்டிக் கார்டு வடிவில் வழங்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இனி போக்குவரத்துத் துறை சார்பில் வழங்கப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மின்னணு வடிவில் மட்டுமே வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி. புத்தகங்களை மத்திய அரசின் ‘பரிவாஹன்’ இணையதளம் அல்லது ‘டிஜிலாக்கர்’ செயலி மூலம் எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாகனச் சோதனையின் போது ஸ்மார்ட்போனில் உள்ள இந்த டிஜிட்டல் ஆவணங்களைக் காட்டினாலே போதுமானது; இது சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த டிஜிட்டல் நடவடிக்கை மூலம் காகிதப் பயன்பாடு குறைவதோடு, போலி ஆவணங்கள் உருவாவது தடுக்கப்பட்டு, பொதுமக்கள் ஆவணங்களைப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது.