இந்தியாவில் தேர்தலில் அரிதாகவே போட்டியிடும் பல அரசியல் கட்சிகளுக்கு, ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நன்கொடை நிதி குவிந்து வருவது குறித்த அதிர்ச்சித் தகவல்கள் பிபிசி புலனாய்வு அறிக்கையில் வெளியாகியுள்ளன.
தேர்தல் அரசியலில் எவ்வித சுறுசுறுப்பும் காட்டாத இந்தக் கட்சிகள், பிரம்மாண்டமான தொகையை நன்கொடையாகப் பெறுவதுடன், அதை முழுமையாகச் செலவிட்டதாகவும் கணக்குக் காட்டுகின்றன. இத்தகைய செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் நிதி வல்லுநர்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
முறையான அரசியல் செயல்பாடுகள் இல்லாத நிலையில், இவ்வளவு பெரிய நிதியுதவி இந்தக் கட்சிகளுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டவிரோத கருப்புப் பணத்தைச் சட்டபூர்வமாக மாற்றும் ‘ஷெல்’ நிறுவனங்களின் முகமூடிகளாகவே இதுபோன்ற போலியான அரசியல் கட்சிகள் செயல்படுகின்றனவா என்ற கோணத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் அரசியல் கட்சிகள், நிதியுதவி என்ற பெயரில் பணமோசடியில் ஈடுபடுவது நாட்டின் பொருளாதாரத்திற்கும் தேர்தல் முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் இத்தகைய சந்தேகத்திற்குரிய கட்சிகளின் நிதி ஆதாரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.