அளவுக்கு மிஞ்சிய ஸ்மார்ட்போன் பயன்பாடு: கை, கால்கள் செயலிழக்கும் அபாயம்! – எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, அதிகப்படியான செல்போன் பயன்பாடு உடலுக்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதால் கை மற்றும் கால்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் (US National Library of Medicine) 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட அதிர்ச்சி தரும் ஆய்வு ஒன்றில், சமீபகாலமாக கழுத்து வலி மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், மனித உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தசை மற்றும் எலும்பு மண்டலம் சார்ந்த (Musculoskeletal) வலிகளில், சுமார் 8.2 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான பாதிப்புகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டினாலேயே ஏற்படுவதாக அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் தலையைக் குனிந்தபடி செல்போனைப் பார்ப்பதால் கழுத்து எலும்புகள் மற்றும் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால்களில் மரத்துப் போதல் மற்றும் செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக் கூடும். எனவே, தொடர்ச்சியாகச் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இடையே சிறு இடைவேளை எடுப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top