சமூக ஊடகங்களில் சமீபகாலமாகப் புதுமையான சமையல் குறிப்புகள் என்ற பெயரில் பல்வேறு ஆபத்தான உணவுமுறைகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஊமத்தை பூவைச் சமைத்துச் சாப்பிடலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. ஆனால், ஊமத்தை பூ உண்மையில் உணவுக்கு ஏற்றதா? அதில் உள்ள ஆபத்துகள் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிர எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஊமத்தை தாவரம் முழுவதுமே தீவிர நச்சுத்தன்மை (Toxicity) கொண்டதாகும். குறிப்பாக இதன் பூக்கள், விதைகள் மற்றும் இலைகளில் ‘அட்ரோபின்’, ‘ஸ்கோபோலமைன்’ போன்ற அபாயகரமான வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. இவற்றைச் சமைத்து உட்கொள்வது கடுமையான மயக்கம், பார்வை மங்குதல், மனக்குழப்பம், இதயத் துடிப்பு மாறுபடுதல் மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகளை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
பராம்பரிய மருத்துவமுறைகளில் ஊமத்தை குறிப்பிட்ட அளவு சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டாலும், அதைச் சமையலில் நேரடியாகப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் அறிவியல் ஆதாரமற்ற சமையல் குறிப்புகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.