வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களைக் குறிவைத்து ‘போலியான நேர்காணல் கருவிகள்’ (Fake Interview Tools) மூலம் பணத்தை அபகரிக்கும் புதிய வகை டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களைத் தொடர்புகொள்ளும் மோசடி கும்பல், அவர்களை உயர் சம்பள வேலைக்கான நேர்காணலில் பங்கேற்குமாறு ஆசை வார்த்தைகள் கூறி அழைக்கிறது.
தொடர்ந்து, நேர்காணலில் கலந்துகொள்ள ஒரு குறிப்பிட்ட செயலி அல்லது மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். அந்தப் போலியான மென்பொருளைச் செல்போன் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்த சில நிமிடங்களிலேயே, பயனர்களின் வங்கிச் கணக்கு விவரங்கள் மற்றும் ரகசியத் தரவுகள் திருடப்பட்டு, அவர்களின் வாழ்நாள் சேமிப்பு முழுமையாகக் கொள்ளையடிக்கப்படுகிறது.
‘நேர்காணல் செயலி என நம்பிப் பதிவிறக்கம் செய்து எனது மொத்தச் சேமிப்பையும் இழந்துவிட்டேன்’ எனப் பாதிக்கப்பட்டவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற முன்பின் தெரியாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், அதிகச் சம்பளம் தருவதாகக் கூறும் போலி வேலைவாய்ப்பு அழைப்புகளைத் தீர விசாரிக்காமல் நம்ப வேண்டாம் என்றும் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.