உலகளவில் கோடிக்கணக்கான மக்களை வதைக்கும் தீவிர ஆரோக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) உருவெடுத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ‘மைக்ரேன் டிரஸ்ட்’ (Migraine Trust) அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் ஏழில் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு உள்ளது. அதாவது உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பாதிப்பில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிக்கித் தவிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாறுபாடுகள், மாதவிடாய் சுழற்சி காலம், கர்ப்பகால மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவை பெண்களை இந்நோய் அதிகம் தாக்குவதற்கு முதன்மைக் காரணங்களாக அமைகின்றன.
மேலும், தற்போதைய நவீன வாழ்வியல் மாற்றங்களான தூக்கமின்மை, முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் தொடர்ச்சியான திரை பயன்பாடு ஆகியவை ஒற்றைத் தலைவலியை மேலும் தீவிரமாக்குகின்றன. சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையும், ஆரோக்கியமான வாழ்வியல் முறையும் இந்நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.