சமூக வலைத்தள ராட்சதனான மெட்டா நிறுவனம், இந்தியாவில் குழந்தைப் பாலியல் துன்புறுத்தலை ஊக்குவிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி பிரசாரக் குழு ஒன்று வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் இந்த பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 10 மாதங்களில் மட்டும், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் படங்களைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டண விளம்பரங்களை மெட்டா தனது தளங்களில் அனுமதித்துள்ளது தெரியவந்துள்ளது. அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படங்கள் மற்றும் விளம்பரங்கள், பெரும் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பயனர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிக்கொள்ளும் மெட்டா நிறுவனம், இத்தகைய கொடூரமான விளம்பரங்கள் மூலம் கட்டணம் பெற்று லாபம் ஈட்டுவது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, மெட்டா நிறுவனத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.