தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மிசா சட்ட விவகாரத்தில் விஜய்யின் விமர்சனங்கள் மற்றும் உடல்மொழிக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தவெக மாநாட்டில், மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்து மறைமுகமாகவும், கிண்டல் செய்யும் வகையிலும் விஜய் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யார் தம்மை கொச்சைப்படுத்திப் பேசினாலும், எள்ளி நகையாடினாலும் வரலாற்றுச் சான்றுகளை ஒருபோதும் மாற்றவே முடியாது” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களின் தியாகத்தையும் போராட்ட வரலாற்றையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், அரசியல் ஆதாயத்திற்காக சிலர் வரலாற்றைத் திரித்துப் பேச முயற்சிப்பதாகவும் அவர் சாடினார். விஜய் மற்றும் ஸ்டாலின் இடையிலான இந்த நேரடி வார்த்தை மோதல், தமிழக அரசியல் களத்தில் மேலும் சூட்டை அதிகரித்துள்ளது.