புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக இல்லாதபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கைகளின் தாக்கம் இந்த மாநாட்டில் அதிகளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்குமா என்பது உலக நாடுகளின் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. மாநாட்டின் போது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக உள்ளூர் செலாவணிகளைப் பயன்படுத்துவது மற்றும் பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. டிரம்ப்பின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் வகுக்கும் புதிய வியூகம், உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.