தூக்கத்தில் அறியாமல் பற்களை நறநறவெனக் கடிக்கும் பழக்கம் இன்றைக்குப் பலரிடம் காணப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு பேரில் ஒருவருக்கு இந்தப் பழக்கம் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தங்களுக்கு இப்படியொரு பழக்கம் இருப்பது பலருக்குத் தெரியாமலேயே இருப்பதுதான் இதில் உள்ள மிகப்பெரிய சோகம். அதிகப்படியான மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்கமின்மையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தப் பழக்கம் தொடர்ந்து நீடிக்கும் போது, பற்களின் மேல் அடுக்கு தேய்மானம் அடைவதுடன், தாடை எலும்புகளில் கடுமையான வலி உருவாகும். மேலும், சிலருக்குத் தாடைத் தசைகள் அளவுக்கு அதிகமாக விரிவடைந்து, அவர்களின் இயல்பான முக வடிவமே மாறும் அபாயமும் உள்ளது. ‘இரவில் பல் கடித்ததால் என் முக அமைப்பே மாறிவிட்டது’ என்று பாதிக்கப்பட்ட சிலர் தங்களின் கவலையைப் பகிர்ந்துள்ளனர்.
இப்பிரச்சனையிலிருந்து தப்பிக்க, ஆரம்பக் கட்டத்திலேயே பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ‘நைட் கார்ட்’ (Night Guard) உபகரணத்தைப் பயன்படுத்துவது பற்களையும் தாடையையும் பாதுகாக்கும். மேலும், தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதும் இதன் தீவிரத்தைத் தடுக்கும்.