தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிகளில், தமிழக அரசு இரண்டு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை உயர்கல்வித் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என ஒரு தரப்பினர் கருதும் வேளையில், இதற்கு எதிராகவும் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த புதிய சட்டத் திருத்தம் உயர்கல்வித் துறையை முழுமையாகத் தனியார்மயமாக்குவதற்கே வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனால் ஏழை மற்றும் விளிம்புநிலை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதோடு, மாநிலத்தின் சமூகநீதிக்கான சூழலும் கேள்விக்குறியாகும் என்று எச்சரிக்கின்றனர்.
அதேவேளையில், இத்தளர்வுகள் மூலம் புதிய முதலீடுகளும் அதிநவீன கல்வி உள்கட்டமைப்புகளும் தமிழகத்திற்கு வரும் என ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த நகர்வு தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை மேலும் மேம்படுத்துமா? அல்லது கல்வியை மேலும் வணிகமயமாக்குமா? என்ற காரசாரமான விவாதங்கள் தற்போது கல்வி வட்டாரத்தில் முன்வைக்கப்படுகின்றன.