முதலமைச்சர் விஜய் நேரடியாக நிர்வகித்து வரும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில், பெரும் முறைகேடு புகார் எழுந்துள்ளதால் அரசு வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக அதிகாரப்பூர்வமாக டெண்டர் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே, பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. விதிமுறைகளை முற்றிலும் புறக்கணித்து, குறிப்பிட்ட நபர்களுக்குச் சாதகமாக இந்த முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இப் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் இயங்கும் துறையிலேயே இத்தகைய நிதி முறைகேடு புகார் எழுந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய பிற அதிகாரிகள் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.