ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை கடுமையான வரி விதிக்க வகை செய்யும் புதிய தடைகள் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மூலம், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்கு அத்தகைய நாடுகள் மீது கூடுதல் வரிகளைச் சுமத்த முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்த போதிலும், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் பெருமளவில் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருகின்றன. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த அமெரிக்க மசோதா, ரஷ்யாவிடம் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் முக்கிய ஐந்து நாடுகளை நேரடியாக இலக்காகக் கொண்டுள்ளது.
இதில் இந்தியாவும் முக்கிய இடத்தில் இருப்பதால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு எவ்வாறு தூதரக ரீதியாகச் சமாளிக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.