ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய தடைகள் மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவின் மூலம், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு பிற நாடுகளின் மீது கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதிக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் தடைகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.இந்நிலையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்ட நடவடிக்கை இந்தியா உட்பட ரஷ்யாவிடம் அதிக அளவில் வர்த்தகம் செய்யும் ஐந்து முக்கிய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த வர்த்தகக் கட்டுப்பாட்டு அதிகாரம் இந்திய-அமெரிக்க வர்த்தக உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியா மீது 100 சதவீத வரி விதிப்பாரா அல்லது விலக்கு அளிப்பாரா என்பதை சர்வதேச உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.