ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய தடைகள் மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எரிபொருள் வாங்கும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா சர்வதேச அளவில் பல தடைகளை விதித்து வருகிறது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா மூலம், குறிப்பிட்ட நாடுகள் மீது 100% வரை அபார வரி விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி சட்டத்திருத்தம் இந்திய வர்த்தகத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தடை மசோதாவால் இந்தியாவிற்கான எரிபொருள் இறக்குமதி செலவு மற்றும் பொருளாதாரத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.