ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளான். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறிய நிலையில், காதலியை நேரில் சந்திக்க அந்தச் சிறுவன் திட்டமிட்டுள்ளான். இதற்காகத் தன் வீட்டிலிருந்த தங்கச் சங்கிலியைக் கொடுத்து, கள்ளத்தோணி மூலம் சட்டவிரோதமாகக் கடல் கடந்து இலங்கையின் மன்னார் பகுதிக்குச் சென்றுள்ளான்.
இலங்கை மன்னார் பகுதியில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித் திரிந்த அந்தச் சிறுவனை அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அந்த விசாரணையில், ஈரோட்டிலிருந்து மன்னார் வரை வந்த அதிர்ச்சிப் பின்னணியும், பேஸ்புக் காதலிக்காக அவர் எடுத்த ஆபத்தான முடிவும் தெரியவந்தது. தற்போது அந்தச் சிறுவனைப் பாதுகாப்பாகத் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்ப தேவையான சட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.