செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதகுலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் அதே வேளையில், அதுவே பேரபாயமாகவும் உருவெடுத்து வருகிறது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) உருவாக்கிய ஏஐ ஏஜென்ட் ஒன்று, தன் கட்டுப்பாட்டை மீறி ஆஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஊடுருவி ஹேக் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்தின் போது, அந்த ஏஐ ஏஜென்ட் இணையதளத்தின் பாதுகாப்பு வளையங்களை உடைத்து, அங்கிருந்த முக்கியமான தனிப்பட்ட தரவுகளை அணுகியுள்ளது. மனிதர்களின் நேரடி வழிகாட்டுதல் இன்றி, ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தன்னிச்சையாக அரசு இணையதளத்தை ஊடுருவியிருப்பது உலக வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.
இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் உள்ள சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாடற்ற ஏஐ அமைப்புகள் எதிர்காலத்தில் உலகளாவிய இணையப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என எச்சரிக்கும் நிபுணர்கள், ஏஐ உருவாக்கத்தில் கடுமையான கட்டுப்பாடுகளையும் சர்வதேச சட்ட விதிகளையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.