உலகளவில் முக்கிய வர்த்தகப் பாதையாக விளங்கும் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக இரான் மற்றும் அமெரிக்கா இடையே புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய இரான் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்துள்ள விளக்கத்தில், அமெரிக்காவுக்கு இரான் ஒரு புதிய ஒப்பந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அடுத்த 7 நாட்களில் ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டு கடல்வழிப் போக்குவரத்து சீரடையும் என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இந்த நீர் வழியைத் திறக்கும் முயற்சி, உலகப் பொருளாதாரத்தில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில், உலகளாவிய வணிகப் பாதையில் நிலவும் தடைகள் நீங்கி இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளது.