போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் புதிய புதிய ஆபத்தான வழிகளைக் கண்டறிந்து வரும் சூழலில், பசிபிக் தீவு நாடான ஃபிஜியில் ‘ப்ளூடூத்திங்’ (Bluetoothing) என்ற அதிர்ச்சியளிக்கும் போதை பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவரின் உடலில் இருந்து ரத்தத்தை ஊசி மூலம் எடுத்து, அதை உடனடியாக மற்றொருவரின் உடலில் செலுத்தி போதை ஏற்றும் கொடூரமான முறையே ‘ப்ளூடூத்திங்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த அதிர்ச்சி நடைமுறை ஃபிஜி நாட்டில் ஏற்கனவே நிலவி வரும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. போதைப்பொருளின் அதிக விலை மற்றும் தட்டுப்பாடு காரணமாக, குறைந்த செலவில் போதை பெற இத்தகைய ஆபத்தான முறையை அங்குள்ள இளைஞர்கள் கையாண்டு வருகின்றனர். எனினும், இந்த முறையில் போதை ஏறுவது மிகக் குறைவு என்பதோடு, ஹெச்.ஐ.வி (HIV), ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற உயிருக்கு ஆபத்தான ரத்தம் சார்ந்த நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.