சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற நீர்த்தேக்கம் ஒன்றில் உவர்நீர் முதலை உலாவுவது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் இந்த படம் தீவிரமாகப் பரவிய நிலையில், அப்பகுதியில் பெரும் பீதியும் குழப்பமும் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், அந்த புகைப்படம் உண்மை அல்ல என்பதும், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தத்ரூபமாக உருவாக்கப்பட்ட போலி படம் என்பதும் அம்பலமானது. இத்தகைய போலி படத்தைப் பதிவிட்டு பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய குற்றத்திற்காக, அந்த நபர் மீது சிங்கப்பூர் காவல்துறை தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.
சமீபகாலமாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்குவது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பகிர வேண்டாம் என்றும், போலி செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.