பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், இல்லாத இரண்டு குழந்தைகள் பிறந்ததாகக் கூறி தனது முன்னாள் ஆண் நண்பரை ஏமாற்றி ரூ.38 லட்சம் வரை பணம் பறித்த விசித்திரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது முன்னாள் காதலனை முழுமையாக நம்பவைப்பதற்காக, இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட குழந்தையின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படங்கள், போலி புகைப்படங்கள் மற்றும் குழந்தைகள் அழுவது போன்ற ஒலிப்பதிவுகளை அப்பெண் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.
இந்த மோசடியை உண்மை என நம்பிய அந்த நபர், குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்காகத் தொடர்ந்து பெருந்தொகையை அனுப்பியுள்ளார். ஆனால், உண்மையில் அப்படியொரு குழந்தைகளே பிறக்கவில்லை என்பதும், அது முற்றிலும் திட்டமிடப்பட்ட ஏமாற்று வேலை என்பதும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, “இது மிகவும் அசாதாரணமான மற்றும் நுட்பமாகத் திட்டமிடப்பட்ட மிகப்பெரிய மோசடி நடவடிக்கை” என்று வர்ணித்துள்ளார். நவீன தொழில்நுட்பத்தையும் மனித உணர்வுகளையும் தவறாகப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட இந்த ஏமாற்றுச் சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.