இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தீவிரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தற்போது தேசிய அளவைத் தாண்டி, சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் முன்னணி செய்தி ஊடகங்கள், இந்தியாவில் நடக்கும் இந்த அரசியல் சூழல் குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகக் கருதப்படும் தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைக்கப்படும் முறைகேடு குற்றச்சாட்டுகள், உலகளவில் இந்திய தேர்தல் அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்திய உள்நாட்டு அரசியல் விவகாரம் ஒன்று எல்லைகளைத் தாண்டி பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியிருப்பது சர்வதேச அரசியல் வல்லுநர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.