சென்னையில் இன்று மீண்டும் அதி கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களின் செல்போன்களுக்கு நேரடியாக அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தலைநகர் சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவசர உதவிக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.