‘தேனிசைத் தென்றல்’ தேவா என்றதுமே பலரின் நினைவுக்கு வருவது அவரது துள்ளலான கானா பாடல்களும், திரையரங்குகளை அதிரவைத்த ‘மாஸ்’ பின்னணி இசையும்தான். ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ என மாஸ் திரைப்படங்களுக்கு இணையற்ற இசையை வழங்கி, தமிழ் சினிமாவின் கானா பாடல்களுக்கான முகமாகவே தேவா அறியப்பட்டார்.
ஆனால், “இந்தப் பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன் என்று சொன்னால் பலரும் நம்ப மறுக்கிறார்கள்” என்று தேவாவே பல மேடைகளில் குறிப்பிடும் அளவிற்கு, மென்மையான காதல் மற்றும் மெலடிப் பாடல்களையும் அவர் வாரி வழங்கியுள்ளார். கானா என்ற ஒற்றைப் பிம்பத்தைக் கடந்து, அவரது உண்மையான இசை ஆளுமையை உலகிற்கு உணர்த்தியவை அவரது மெலடி பாடல்களே ஆகும்.
‘ஆச ஆசையாய்’, ‘நிலவை கொண்டு வா’, ‘நலம்தானா நலம்தானா’ என அவர் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் நெஞ்சில் தேனாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. துள்ளல் இசைக்கு நிகராக, தேவாவின் மெலடிப் பாடல்களும் தமிழ் திரையிசை வரலாற்றில் என்றும் அழியாத பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன.