உலகின் மிகச்சிறந்த பெண் விமானிகளில் ஒருவரான அமீலியா ஏர்ஹார்ட், கடந்த 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டபோது பசிபிக் பெருங்கடல் பகுதியில் விசித்திரமான முறையில் மாயமானார். விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகப்பெரிய மர்மமாக நீடிக்கும் இந்தச் சம்பவத்திற்கு விடை காணும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று புதிய ஆய்வைத் தொடங்கியுள்ளது.
அமீலியா பயணித்த விமானத்தின் சிதைவுகள் மற்றும் தடயங்கள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் தொலைதூர பசிபிக் தீவு ஒன்றை அடைந்துள்ள விஞ்ஞானிகள், அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 28 கிலோ வரையிலான எடையைத் தூக்கக்கூடிய அபாயகரமான ராட்சத ‘தேங்காய் நண்டுகள்’ அதிகளவில் வாழும் இந்தத் தீவில், அதிநவீன கருவிகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தேடல் முயற்சி, வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.