உலகளவில் பெரும் மர்மமாக நீடிக்கும் அமெரிக்க பெண் விமானி அமீலியா ஏர்ஹார்ட்டின் மறைவு குறித்து புதிய ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 1937-ஆம் ஆண்டு, உலகை விமானத்தில் சுற்றி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்ட புகழ்பெற்ற விமானி அமீலியா ஏர்ஹார்ட், பசிபிக் பெருங்கடல் பகுதியில் தனது விமானத்துடன் திடீரென மாயமானார். சுமார் 90 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அவருடைய விமானத்தின் பாகங்களோ அல்லது அவர் என்ன ஆனார் என்பது குறித்த தெளிவான தகவல்களோ இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், அமீலியா பயணித்த விமானத்தின் சிதைவுகள் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தொலைதூரத் தீவில் இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதற்காக சிறப்பு ஆய்வாளர்கள் குழு ஒன்று அதிநவீன கருவிகளுடன் அந்தத் தீவைச் சென்றடைந்துள்ளது. குறிப்பாக, 28 கிலோ வரையிலான எடையைத் தூக்கக்கூடிய ராட்சத ‘தேங்காய் நண்டுகள்’ அதிகம் வாழும் அடர்ந்த பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய தேடுதல் வேட்டை, பல தசாப்தங்களாக நீடித்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மர்மத்திற்கு இறுதியாக விடை தருமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்துள்ளது.