இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசுமுறைப் பயணமாக அஜர்பைஜான் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள பல்வேறு வரலாற்று மற்றும் தூதரக நிகழ்வுகளில் பங்கேற்று வரும் அவர், தலைநகர் பாகுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அத்தேஷ்கா அக்னி கோயிலுக்கு’ (Ateshgah Fire Temple) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தக் கோயில் அஜர்பைஜான் நாட்டில் அமைந்திருந்தாலும், இந்திய வரலாற்றுடனும் பண்பாட்டுடனும் மிகவும் நெருங்கியத் தொடர்பு கொண்டது. பழங்காலத்தில் வர்த்தகம் செய்யச் சென்ற இந்திய வணிகர்களால் உருவாக்கப்பட்ட இக்கோயிலில், பழமையான சமஸ்கிருதம் மற்றும் பஞ்சாபி மொழிகளிலான கல்வெட்டுகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடி இயற்கை எரிவாயு மூலம் தன்னிச்சையாக அணையாமல் எரியும் ‘அணையாத தீப்பிழம்பு’ இக்கோயிலின் மிகப்பெரிய சிறப்பு அம்சமாகும்.
கோயிலைப் பார்வையிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே நிலவிய ஆழமான கலாச்சார மற்றும் வணிகத் தொடர்புகளுக்கு இக்கோயில் ஒரு வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறது எனக் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த வருகை இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேலும் புதுப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.