சீன அரச நிறுவனமான ‘சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்’ (China Merchants Port Holdings), இலங்கையின் கொழும்புத் துறைமுகத் தளவாட மையக் கூட்டுத் திட்டத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. சுமார் 392 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த பிரம்மாண்ட திட்டத்திலிருந்து சீனா விலகியிருப்பது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, சீனாவின் இந்த அதிரடி முடிவு மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவின் முக்கியத் தளவாட மையமாக மாற்றுவதற்கும், அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் இத்திட்டம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
சீனா இத்திட்டத்திலிருந்து திடீரென விலகியதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இருப்பினும், இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழல், கடன் மறுசீரமைப்புச் சிக்கல்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக மாற்றங்களே இதற்குக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.