இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் ரூ.30,213 கோடி மதிப்பிலான ஜியோ ஐபிஓ புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், 1977-இல் தீருபாய் அம்பானி வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் ஐபிஓ பற்றிய சுவாரசியமான தகவல்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. அன்றைய காலத்தில் பங்குச்சந்தை என்பது பெரும் பணக்காரர்களுக்கானது என்ற பிம்பத்தை உடைத்து, சாமானிய நடுத்தர மக்களையும் முதலீடு செய்ய வைத்த பெருமை தீருபாய் அம்பானியையே சாரும்.
1977-இல் ரிலையன்ஸ் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டபோது, வழக்கமான முதலீட்டாளர்கள் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் நம்பிக்கையுடன் முதலீடு செய்தனர். அப்போது ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட வெறும் ரூ.1,000, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சி, போனஸ் பங்குகள் மற்றும் பங்குகள் பிளவு (Stock Split) ஆகியவற்றின் மூலம் இன்று சுமார் ரூ.50 லட்சம் என்ற பிரமாண்ட தொகையாக வளர்ந்துள்ளது.
வங்கி சேமிப்பை மட்டுமே நம்பியிருந்த இந்தியர்களுக்கு, பங்குச் சந்தை மூலம் பெருமளவில் மூலதனத்தைப் பெருக்க முடியும் என்ற விழிப்புணர்வை ரிலையன்ஸ் உருவாக்கியது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அடித்தளமே, இன்று ஜியோ வரை ரிலையன்ஸ் குழுமத்தை இந்திய நிதிச் சந்தையின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.