தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறைச்சாலையில் இருந்து நேற்று இரவு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தையடுத்து, தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
நேற்று இரவே தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 13 கைதிகளை உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த எஞ்சிய நபர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில், இன்று மேலும் 2 கைதிகளைக் காவல்துறையினர் அதிரடியாகப் பிடித்துள்ளனர்.
இதன் மூலம் தப்பியோடிய 17 கைதிகளில் இதுவரை 15 பேர் மீண்டும் காவல்துறையினரின் பிடியில் சிக்கியுள்ளனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள 2 கைதிகளையும் விரைவாகப் பிடிக்க தேனி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.