வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முதன்மைத் தலைவர்கள் பலர் பங்கேற்று உரைநிகழ்த்துகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான நடவடிக்கை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராம்லீலா மைதானத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைகளுக்குப் பிறகே பொதுமக்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முக்கியச் சாலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இக்கூட்டம் தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.