வரவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஒரே மேடையில் பங்கேற்கும் இந்த நிகழ்வு, தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உட்பட கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் பலத்தையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும் வகையில் இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க டெல்லி ராம்லீலா மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான டெல்லி போலீசாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு தலைநகர் டெல்லி தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.