வாழ்க்கையில் எடுக்கும் ஒரு சிறிய முடிவு, பல நேரங்களில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்குச் சான்றாக மாறியுள்ளார் இலங்கையைச் சேர்ந்த 50 வயதான ருச்சிரா ரணசிங்கே. தாய்நாடு திரும்ப முடியாமல், பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய குக் தீவில் கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் பரிதவித்து வருகிறார்.
இலங்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து (Transit) விசா கிடைக்காததே இவரது இந்த அவல நிலைக்கு முதன்மை காரணமாகும். இவரது பயணப் பாதையில் அமைந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இவருக்கு விசா வழங்கத் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து விட்டன. இதனால், அந்த நாடுகளின் வான்வெளி அல்லது கடல் வழியைப் பயன்படுத்தி அவரால் சொந்த நாட்டிற்குப் பயணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
சுற்றிலும் கடல் சூழ்ந்த ஒரு சிறிய தீவில், எந்தவித ஆதரவும் இன்றி, சொந்த வீட்டிற்கும் செல்ல முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கும் இவரது நிலைமை சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் தன்னை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.