சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆந்திர எல்லை நடுக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மாயமாகி 48 மணி நேரத்திற்கும் மேலாகியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினரும், படகின் உரிமையாளரும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், ஆந்திர மாநில கடல் பகுதியில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், படகில் ஏற்பட்ட எந்திரக் கோளாறு அல்லது கடல் சீற்றத்தின் காரணமாக அவர்கள் கரை திரும்ப முடியாமல் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 48 மணி நேரத்தைக் கடந்தும் அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.
காணாமல் போன 9 மீனவர்களையும் உடனடியாகக் கண்டுபிடிக்கத் தமிழ்நாடு அரசும், இந்திய கடலோரக் காவல் படையும் அதிவிரைவாகச் செயல்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.