கடந்த மாதம் 10 ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெண்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் செல்லலாம். மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 மற்றும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என ஏகப்பட்ட வாக்குறுதிகளை தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இவை அனைத்தும் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்பதை அறிவித்து இருந்தது. இந்த திட்டத்தின் வாயிலாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவெக தேர்தல் அறிக்கையான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறப்பட்டிருப்பதாவது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் மற்றும் பிரசவிக்கும் தாயையும் கெளரவிக்கும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாக பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழ்நாடு ரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை நினைவு கூறும் விதமாகவும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டு அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இந்த திட்டத்திற்காக உடனடியாக ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கு முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஜுன் 22 ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பலன் அடைவார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று முதல்வர் இந்த திட்டத்தினை துவங்கி வைப்பார். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தாவது, தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' இருக்கும். அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். மேலும் ஊட்டச்சத்துப் பொருட்கள், பேபி டிரஸ்ஸஸ், தரமான பேபி சோப்ஸ், ஆயில், பவுடர் மற்றும் பேபி கொசுவலைகள், பொம்மைகள், நாப்கின்ஸ் மற்றும் டயப்பர்கள் அடங்கிய 'பேபி வெல்கம் கிட்' (Baby Welcome Kit) வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

