(AI) வந்தபிறகு பல துறைகளில் பல இடங்களில் பணிநீக்கங்கள் அதிகரித்துள்ளன. முன்னணி நிறுவனங்களின் பணியாளர்களை செயற்கை நுண்ணறிவு மேம்படுத்துவதாக நிறுவனங்கள் கூறினாலும், அது லட்சக்கணக்கான ஊழியர்களுக்குக் கவலையளிக்கும் ஒரு காரணமாகவும் மாறி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இந்நிறுவனம், 2026 நிதியாண்டுக்குள் உலகளவில் சுமார் 21,000 ஊழியர்களைப் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்களின் அதிகரித்து வரும் பயன்பாடு எதிர்காலத்தில் இன்னும் அதிகமான வேலைகளைப் பாதிக்கலாம் என்று கூறுகிறது. ஆரக்கிள் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி, ஒரு வருடத்திற்கு முன்பு 1,62,000 ஆக இருந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 2026 மே 31ஆம் தேதிக்குள் 1,41,000 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, ஆரக்கிள் நிறுவனத்தின் மொத்தப் பணியாளர் எண்ணிக்கை சுமார் 13 சதவீதம் குறைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல செயல்முறைகள் தானியங்கி மயமாக்கப்படுவதால் ஊழியர்களின் தேவை குறைக்கப்படுவதாக ஆரக்கிள நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, நிர்வாக மாற்றங்கள், புதிய உற்பத்தி, செயல்திறன் தொடர்பான சிக்கல்கள் மற்றும் மூலோபாய மறுசீரமைப்பு ஆகியவையும் பணிநீக்கங்களுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.ஆரக்கிள் நிறுவனம் இனி ஒரு தரவுத்தள மென்பொருள் நிறுவனமாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. தலைவர் லாரி எலிசனின் தலைமையில் ஆரக்கிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறைகளில் வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்நிறுவனம் OpenAI போன்ற வாடிக்கையாளர்களுக்காக பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கு நேரடியாக சவால் விடுவதை ஆரக்கிள் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் 70 பில்லியன் டாலர் மூலதன முதலீடு செய்யவிருப்பதாக ஆரக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முதலீட்டுக்கு நிதியளிக்க, இந்நிறுவனம் கூடுதல் கடன் மற்றும் பங்கு மூலதனம் மூலம் 40 பில்லியன் டாலர் நிதி திரட்டத் தயாராகி வருகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவுக்கான இந்த பந்தயம் நிறுவனத்திற்கு மிகவும் செலவு மிக்கதாகப் பார்க்கப்படுகிறது. 2026 நிதியாண்டில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதற்கும் மறுசீரமைப்பதற்கும் ஆரக்கிள் நிறுவனம் 1.84 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 374 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றும் ஆரக்கிள் நிறுவனம் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது. இதற்கு முன்னர் மனிதர்களால் செய்யப்பட்டு வந்த பல பணிகளை இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் தானிங்கி மயத்தின் மூலம் செய்து முடிக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்புகிறது. உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை வேகமாக ஏற்றுக்கொண்டு வரும் வேளையில் ஆரக்கிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்றாலும், அது பல வேலைகளையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

