திபெத்: திபெத் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக, அங்கே இயற்கையாகவே பெரிய ஏரி போன்ற நீர் தேக்கம் (barrier lake) ஒன்று உருவானது. தற்போது அந்த ஏரியிலிருந்து அதிகளவில் நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த புதிய ஏரி எந்த நேரத்திலும் உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற பேரபாய அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக, திபெத் பகுதியில் நடைபெற்று வந்த தீவிர மீட்புப் பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நிலைமையை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அதேவேளையில், திபெத்தில் ஏரி உடைந்து நீர் பெருக்கெடுத்து ஓடினால், அது அண்டை நாடான நேபாளத்தின் எல்லைப் பகுதிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அங்கு மீண்டும் கடும் பதற்றமும் அச்சமும் நிலவி வருகிறது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.