திபெத் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து புதிதாக உருவான இயற்கைத் தடுப்பு ஏரியால் (Barrier Lake) சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளில் கடும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவின் காரணமாக ஆற்றின் குறுக்கே மண் மற்றும் பாறைகள் சரிந்து, ஏரி போன்றதொரு தற்காலிக அமைப்பு உருவானது. தற்போது அந்த ஏரியிலிருந்து ஆபத்தான முறையில் நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த ஏரியின் கரை உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் பேரழிவு உண்டாகும் என்ற அச்சம் காரணமாக, திபெத் பகுதியில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த ஏரி உடையும் பட்சத்தில் நேபாளத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதால், ஆற்றுப் படுகையோரங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள அரசு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.