தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ‘எஃப்.கியூ.எல்’ (FQL) என்ற மொபைல் செயலி மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் முதலீடு செய்த சிலருக்கு கணிசமான தொகை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த நிறுவனம், அதன்பின் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் இருந்து பெருந்தொகையை வசூலித்துள்ளது. 45 நாட்கள் கடந்த பின்னரும் முதலீடு செய்த பணத்தையோ, வாக்குறுதி அளித்த லாபத்தையோ தராமல் மொபைல் செயலியை முடக்கிவிட்டு நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களின் பணத்தை மீட்டுத் தருமாறும், இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் திரளாக வந்து புகார் அளித்து வருகின்றனர். இச்சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.